Dec 12, 2022

விபத்து வழக்குகளை சமாதானமாக முடிக்கலாமா?

 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304A


அவசரம் மற்றும் அஜாக்கிரதையால், குற்றமுறு கொலை அல்லாது, மரணத்தை விளைவிக்கும் நபர், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து, தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

 

விபத்தில் நபர் இறந்து விடுகிறார், இப்போது இறந்த நபரின் குடும்பம், குற்றம் சாட்டப்பட்ட நபருடன் சமாதானமாக போவதாக வழக்கினை முடித்துக் கொள்ள முடியுமா? 

Gian Singh -vs- State of Punjab என்கிற வழக்கில் இவ்வாறு முடிக்கப்பட்டாலும் கூட, அதன் பின் வந்த உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளில், இத்தகைய வழக்குகளை சமாதானமாக முடிக்க முடியாது என்பதே உறுதி செய்யப்பட்டுள்ளது.

Bhajan Lal Sharma -vs- State of NCT delhi வழக்கில் இவ்வாறு முடிப்பது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும்,

Sadha Singh -vs- State of Punjab வழக்கில், இவ்வாறு சமாதானம் செய்து கொள்ள அனுமதிப்பது, பணம் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற என்னத்தை ஏற்படுத்தி விடும் என்றும்,

Hari Singh -vs- Sukhbir Singh வழக்கில், விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு காப்பீடு கிடைக்க பல சட்டப்பூர்வ வழிகள் உள்ளது. அதனால், குற்றம் சாட்டப்படும் நபரிடம் பணம் பெற்றுக் கொண்டு வழக்கை முடிக்க அனுமதிக்க முடியாது. உயிரை விலை பேசி விற்பது போல ஆகிவிடும். என்றும்,

State of Karnataka -vs- Sharanappa Basagouda Aregoudar  என்கிற வழக்கில், விபத்துகள் சமூகத்தின் மீதான குற்றம், இறந்தவர் குடும்பத்திற்கு பணம் கொடுப்பதால் வழக்கு ரத்தானால், குற்றவியல் நீதிமுறை கட்டமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விடும் என்றும்,

Dalbir Singh -vs- State of Punjab வழக்கில், தண்டனை என்பது குற்றம் புரிந்த நபருக்கும், மற்றவர்களுக்கும் சட்டத்தின் மீது அச்சத்தினை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டும் என்றும், சொல்லப்பட்டுள்ளது.

அதனால், இது போன்ற அஜாக்கிரதை கவனக்குறைவு விபத்து மரண வழக்குகளை, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் முடிக்க கேட்டாலும், வழக்கை முடித்து தள்ளுபடி செய்வது கூடாது. 


- த.செ. முசம்மில் மீரான்,

    வழக்கறிஞர், திருவைகுண்டம், தூத்துக்குடி.