கால வரையறை சட்டம் (Limitation Act) ஒவ்வொரு வழக்கு மற்றும் மனு தாக்கல் செய்வதற்கும், கால அளவை நிர்ணயித்து, அந்த காலம் எந்த நாளில் இருந்து கணக்கிடப்பட வேண்டும் என்பதையும் பட்டியல் இட்டுள்ளது.
அவ்வாறு உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாது போனால், அச்சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் தனியே, கால தாமதத்தை மன்னிக்க கேட்டு மனு செய்து கொள்ள முடியும்.
ஆனால் இந்த விதிவிலக்கான பிரிவு 5 ஆனது, வழக்குகள் தாக்கல் செய்யவோ அல்லது தீர்ப்புகளை செயல்படுத்த நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்வதற்கோ பொருந்தாது.
உதாரணமாக, ஒரு சொத்து மீட்பு வழக்கு தாக்கல் செய்ய, பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் இருந்து 12 ஆண்டுகள் கால வரையறை, அது போல ஒரு நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யவும் 12 ஆண்டுகள் கால வரையறை உள்ளது. இந்த கால நிர்ணயம் வழக்கின் தன்மையை பொறுத்து மாறும்.
பண வழக்குகள் தாக்கல் செய்ய, ஒப்பந்தம் அல்லது ஆவண தேதி அல்லது தவணை தேதி அல்லது இறுதியாக பணம் செலுத்தப்பட்ட அல்லது ஒப்புக் கொண்டு உயிர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் கால வரையறை. அதன் பின்னர் தாக்கல் செய்யும் வழக்குகள் ஏற்கதக்கது அல்ல.
நாம் பார்க்க போகும் இந்த வழக்கில் வாதிக்கு 3 ஆண்டுகள் கால வரையறை முடிந்து, அதன் பின் 375 நாட்கள் தாமதம் ஆகி விட்டது. வழக்கு தாக்கல் செய்யும் போது தனது தாமதத்தையும் மன்னிக்க கேட்டு வாதி பிரிவு 5 இன் கீழ் மனுவுடன் சேர்த்தே பிராதை தாக்கல் செய்கிறார்.
உச்சநீதிமன்றம் வரை போய், கால வரையறை முடிந்த பின்னர் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், இதே நிபந்தனை உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 21 இன் கீழ் வருகிற நிறைவேற்றுதல் நடவடிக்கை களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு, வாதியின் வழக்கு நிராகரிக்க பட்டது சரியென உத்தரவிட பட்டது.
கால வரையறை என்பது உரிமையியல் வழக்குகளின் அடிப்படை. காலம் கடந்த வழக்குகளை நீதிமன்றம் துவக்கத்திலேயே நிராகரித்து விட முடியும். Limitation Defeats Equity எனப்படும். வழக்கு கொண்டு வருபவரின் பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும் சரி, அவர் சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தை கடந்து வழக்கு தாக்கல் செய்தால் அது நிராகரிக்க பட வேண்டியது என்பதாகும்.
" Vigilantibus non dormientibus aequitas subvenit" - இந்த லத்தீன் பதத்தின் பொருள் "சட்டம் விழிப்புடன் இருப்பவருக்கு துணை நிற்கிறது. தூங்குபவருக்கு உதவுவது இல்லை" (Equity assists the vigilant and not those who sleep on their rights)
வழக்கு தாக்கல் செய்ய மட்டும் தான் கால வரையறை சட்டமா, வழக்கு முடிக்க எந்த கால வரையறையும் இல்லையா என்று கேட்டால், இருக்கிறது ஆனால் (செயலில்) இல்லை... 😐
இந்த பதிவினை காணொளி ஆக முகநூல் பக்கத்தில் காணலாம்.
தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி!
- த. செ. மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.
தொடர்பு கொள்ள @advmeerantj