கட்டளை 1 விதி 1
உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908
ORDER 1 : PARTIES
RULE 1 : WHO MAY BE JOINED AS PLAINTIFFS
" All persons may be joined in one suit as plaintiff where -
(a) any right to relief in respect of, or arising out of, the same act or transaction or series of acts or transactions is alleged to exist in such persons, whether jointly, severally or in the alternative; and
(b) if such persons brought separate suits, any common question of law or fact would arise. "
ஒரே வழக்கில் பல நபர்கள் வாதிகளாக சேர்க்கப்படலாம் எப்போதெனில்,
(அ) ஒரு உரிமை அல்லது பரிகாரம், ஒரே செய்கை அல்லது பரிமாற்றம், அல்லது தொடர்ச்சியான செய்கைகள் அல்லது பரிமாற்றங்கள் பொருட்டு எழுந்து, நபர்களிடத்தில் இருப்பதாக கருதுமிடத்து, கூட்டாகவோ தனியாகவோ அல்லது வேறு வகையில், மற்றும்,
(ஆ) அத்தகைய நபர்கள் தனித்தனியாக வழக்குகளை கொண்டு வரும் போது, சட்டம் அல்லது சங்கதி பற்றிய பொதுவான கேள்வி எழும் போது,
வாதிகளாக யாரெல்லாம் சேர்ந்து வழக்காடலாம் என்பதை பற்றி இந்த விதி பேசுகிறது. எதிர்த்து வழக்காடும் பிரதிவாதிகளைப் பற்றி அல்ல. வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது சரியா தவறா என கேள்வி எழுப்ப வேறு விதி உள்ளது. அதே போல வாதிகளாக சேர்த்து வழக்காட தகுதிநிலை உள்ளதா என்பதும் கேள்வியாக எழுப்பப் படலாம். இந்த விசயங்கள் யாவும் அடிப்படை யானவை என்பதால் வழக்கின் துவக்கத்திலேயே கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டும். தீர்ப்பிற்கு பின்னர் சரி தவறென்று வாதிட இயலாது. வழக்கின் ஆரம்பத்திலேயே தரப்பினர்கள் சேர்க்கப்படாமல் விடப்பட்டதாக வாதிடப்படும் போது பின்னர் அவர்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப் படலாம். வழக்கில் சேர்க்கப்பட மேற்படி புதிய தரப்பினரின் விருப்பம் கேட்கப்படுதல் அவசியம் அல்ல.
வாதிகளாக சேர்க்கப்படும் நபர்கள் இடையே பொதுவான ஒரு உரிமை இருக்க வேண்டும். அல்லது வழக்கு எழுவதற்கு அவர்களுக்குள் பொதுவான ஒரு காரணம் (வழக்கு மூலம்) இருக்க வேண்டும். வழக்கில் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம் (வழக்கெழு வினா) ஏதேனும் ஒன்று பொதுவாக இருந்தாலும் போதும். இது தான் தனித்து வழக்கு தாக்கல் செய்ய அல்லது வாதிகளாக வழக்கில் உடனிணைந்து கொள்ள ஒரு நபருக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.
ஒரு வங்கியில் கடன் வாங்கிய அனைவரையும் ஒன்றாக சேர்த்து, அல்லது ஒரு வங்கியின் மீது நபர்கள் பலர் சேர்ந்து வழக்கிட முடியுமா என்றால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் வங்கியுடனான உறவு தனித்தனி ஒப்பந்தம் மூலம் எழுந்து உள்ளதால், அவர்கள் வாதிகளாக பிரதிவாதிகளாக ஒன்றிணைய முடியாது. வழக்கு எழுவதற்கான விஷயம் (வழக்குமூலம்) இங்கு ஒன்றாக இல்லை. ஆனால், அதுவே ஒரு ஊர் அல்லது ஒரு சமுதாயம் சார்பாக ஒரு நபர் மட்டும் பிரதிநிதி ஆக இருந்து வழக்காட முடியும். அதற்கு தனி விதி வகை செய்கிறது. இதில் ஊரில் உள்ள நபர்கள் அனைவருக்கும் ஒரே உரிமை, வழக்கு மூலம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இதற்கு முன்னர் இந்த விதியில், வாதிகள் அனைவருக்கும் ஒரே வழக்கு மூலம் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே வாதிகளாக இணைய முடியும் என்றிருந்து, பின்னர் 1976 முதல் வாதிகள் அனைவருக்கும் பொதுவான ஒரு உரிமை இருந்தாலே போதும் என்றானது. இதைத்தான் விதியின் இரண்டாவது நிபந்தனையில், பொதுவான ஒரு சட்டம் அல்லது சங்கதி பற்றி நீதிமன்றம் தீர்மானிக்க இருந்தால் போதும் என சொல்லப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு,
ஒரு நபர் இரண்டு நிறுவனங்களின் பெயரை சேர்த்து அல்லது பகுதியாக பயன்படுத்தி தன்னுடைய பொருளை விற்க முயல்கிறார் என்றால், அந்த நபருக்கு எதிராக தடை கேட்டு இரண்டு நிறுவனங்களும் வாதிகளாக இனைந்து வழக்காட முடியும்.
ஒரு நபரின் வீட்டை சுற்றி நாலாபுறமும் இருக்கும் நபர்களால் சிக்கல் வருகிறது என்றால், அவர் அந்த நான்கு பேர்களின் மீதும் சேர்த்து வழக்கிட முடியும். நான்கு வீடுகளின் பாதையை ஒரு நபர் அடைத்து வைத்திருந்தால், அந்த ஒருவர் மீது இவர்கள் நால்வரும் சேர்ந்து ஒரே வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
வாரிசு வழியில் சொத்தை அடைந்த முதல் நபர் அதில் ஒரு பகுதியை இரண்டாம் நபருக்கு கொடுக்கிறார். ஆனால் அந்த சொத்துக்கு தான் வாரிசு என மூன்றாவது நபர் சொந்தம் கொண்டாடினால், முதலிரண்டு நபர்கள் சேர்ந்து மூன்றாமவர் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும். இரண்டாவது நபர் வாரிசுரிமை கீழ் வரவில்லை என்றாலும், சொத்தில் ஒரு பகுதி அளவு உரிமை ஏற்பட்டுள்ளது.
தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை ஒன்று, அல்லது ஒரே விதமான உரிமை என்பது தான் இங்கு அடிப்படை.
வாதியோடு சமாதானமாக போய்விட்ட ஒரு பிரதிவாதி தன்னை வாதியாக மாற்றி சேர்த்துக் கொள்ள கேட்க முடியாது. அவர் தன்னுடைய உரிமையை பொறுத்து மற்ற பிரதிவாதிகளுக்கு எதிராக அதே வழக்கில் அல்லது தனியே வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டியது தான்.
இன்னும் அற்புதமாக, பழைய சட்டத்தில் "Right to any relief" என்று இருந்ததை புதிய சட்டத்தில் "Any Right to relief" என்று திருத்தம் செய்துள்ளார்கள். any என்கிற ஒரு வார்த்தை இடம் மாறுவதால் என்னவாகிடப் போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், பழைய சட்டத்தின் படி வாதியாக இருக்கிறவருக்கு (any relief) நீதிமன்றம் ஏதேனும் பரிகாரம் வழங்க வேண்டும், அல்லது வழக்கில் வாதியாக இருப்பவர் தனக்கு எதாவது பரிகாரம் நீதிமன்றத்திடம் கோரியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் வழக்காட தகுதி பெறவில்லை, அவர் வாதியாக இருக்க முடியாது. ஆனால் புதிய சட்டப்படி வழக்கில் சேர்க்கப்பட அவருக்கு (any right) ஏதாவது உரிமை இருந்தாலே போதும். அவர் வழக்கில் எந்த பரிகாரமும் கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இங்கு தான் அவசியத் தரப்பினர் என்கிற பதம் உண்டாகிறது. ஒரு நபருக்கு உரிமை இருந்தால் போதும், அவரைப் பொறுத்து வழக்கு மூலம் எதுவும் எழவில்லை என்றாலும், அவர் அவசியத் தரப்பினர் என்பதால் வழக்கில் வாதியாக இருக்கிறார். உதாரணமாக ஒரு குடும்பம் குடிவசிப்பதை சிலர் இடைஞ்சல் செய்கிறார்கள், அவர்களுக்கு எதிரான வழக்கில் அந்த வீட்டில் வசிக்காத வெளியூரில் வேலை பார்க்கும் நபரும் வாதியாக சேர்க்கப்படலாம். இடைஞ்சல் என்கிற வழக்குமூலம் அந்த நபரை பொறுத்து ஏற்படா விட்டாலும் கூட, அவருக்கு ஒரு உரிமை இருப்பதால் வாதியாக சேர்க்கப்படலாம் தவறில்லை.
உரிமை என்பது தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்கலாம், என்று சொல்லப்பட்டிருக்கும் அதே வேளையில், இந்த விதியில் "or in alternative" என சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், ஊர் மக்களின் சார்பாக ஊர் தலைவர் பிரதிநித்துவ வழக்காடுவதும், ஒரு நிறுவனம் அல்லது வழிபாட்டுதலங்கள் போன்ற செயற்கை நபர்கள் சார்பாக பிரதிநிதிகள் வாதிகளாக இருக்கலாம் என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
வாதிகளாக சேர்ந்து வழக்காட வராவிட்டால் அவர்களை பிரதிவாதிகளாக சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக கூட்டு குடும்ப சொத்து ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதாகிறது, பாக உரிமைதாரர்கள் அனைவரும் சேர்ந்து வழக்காட வரவில்லை என்றால் அவர்களை பிரதிவாதிகளாக சேர்த்து, அவர்களின் உரிமையும் அங்கிகரித்து அவர்களுக்கும் சேர்த்து பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்.
வழக்குத் தீர்வு :
Sh Jiwanand Jiwan and others -vs- The Himachal Pradesh Housing and Urban Developement Authority
" வாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனைக்கு, தனித்தனியாக பிரதிவாதியுடன் தனிப்பட்ட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்கள். வாதிகள் ஒவ்வொருவரின் வழக்கு மூலமும் வேறுவேறானது. வாதிகளின் வழக்கு ஒரே செயல், அல்லது தொடர்ச்சியான ஒரே செய்கையினால் நிகழவில்லை. எனவே வாதிகள் கூட்டாக சேர்ந்து வழக்கிட தகுதியற்றவர்கள்"
அடுத்த விதி : Order 1 Rule 2
தங்களின் வருகைக்கு நன்றி!
எனது வீடியோ பதிவுகளை Law in Tamil - Legally simplified சேனலில் பார்க்கலாம்.
- த.செ.முசம்மில் மீரான், வழக்கறிஞர் , ஸ்ரீவைகுண்டம்.
என்னை தொடர்பு கொள்ள @AdvMeeranTJ