உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908
Index:
இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு நடைமுறை சட்டம். ஏனெனில் பல்வேறு சட்டங்களுக்கு அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று நடைமுறைகளோ விதிகளோ வகுக்கப்பட்டிருக்காது. அவ்வாறான சூழலில், அத்தகைய சட்டங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தும் நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்கள் பொதுவாக இந்த விசாரணை நடைமுறை சட்டத்தின் படியே செயல்படும். அதனால் இது பல்வேறு இடங்களில் செயல்படக் கூடிய ஒரு பொதுவான சட்டம். அத்துடன் சிறு சிறு திருத்தங்களை தவிர்த்து இந்தியா முழுக்கவும் ஒரே மாதிரியான நடைமுறைகளை கொண்டது.
இது மனித அறிவின் அற்புதமான படைப்பு. ஒரு உரிமையியல் வழக்கு எப்படி நடத்த வேண்டும் என்பதை படிப்படியாக அற்புதமாக விவரிக்கும் நடைமுறை நூல். ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும், ஒவ்வொரு பரிமாணத்தில் புதிய விசயங்களை எனக்கு தரத் தவறியதில்லை.
இதற்கு தமிழில் புத்தகங்கள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை, என்னிடமும் இருக்கிறது. நான் எழுதப் போவது சட்ட மொழியாக்கம் மட்டும் அல்ல. அதில் இருந்து நான் கற்றுக் கொண்டதும், எனது அறிவு விளங்கிக் கொண்டதும், ஆங்கிலத்தில் விளக்க புத்தகங்களில் விரிவாக உள்ளதும், பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் என விரிவாக. அத்துடன் ஒரு உரிமையியல் வழக்கறிஞராக ஒவ்வொரு முறையும் வழக்குகளில் புதிதாக நான் கற்றறியும் விசயங்களையும் சேர்த்துக் கொள்வதற்காக. அதனால் இந்த தொடர் பதிவுகள் அவ்வப்போது Update செய்யப்பட்டுக் கொண்டே இருக்கலாம். புத்தகமாக எழுதி வெளியிடுவதை விட, வலைப்பக்கத்தில் எழுதுவதில் இந்த வசதி இருக்கிறது. எனது புத்தகம் எவ்வளவு விற்கும் என்பதில் நான் கவலைப்பட வேண்டி இருக்கும் ஏனெனில் லாப நஷ்டம் இருக்கிறது. ஆனால் எனது வலைப்பக்கத்தில் எவ்வளவு பேர் வாசிப்பார்கள் என்ற கவலை கூட எனக்கு இல்லை. Google இருக்கும் வரை இந்தப்பக்கம் உயிருடன் இருக்கும் என்று நம்புகிறேன்.
உரிமையியல் விசாரணை முறை சட்டம் ஒரு சிறிய சட்டம் அல்ல. தமிழாக்கம் வேண்டுமானால் சிறிய புத்தகமாக இருக்கலாம். இந்த தொகுப்பை எப்போது எழுதி முடிப்பேன் என்பதில் எந்த கால வரையறையும் உறுதியும் என்னால் கொடுக்க முடியவில்லை. ஆனால் எழுத வேண்டும் என்று எண்ணித் துணிந்து விட்டேன். இந்த முயற்சியை துவங்க எனக்கு உத்வேகம் அளித்தது எலன் மஸ்க்கின் வார்த்தைகள். பழைய நாகரிகங்களை பாருங்கள், ஆச்சரியப்படும் அளவு கட்டுமானங்களை பிரமீடுகளை செய்திருக்கிறார்கள். நம்முடைய தஞ்சை கோயிலை கூட எடுத்துக் கொள்வோம். நம்மால் இப்போது அவற்றை செய்ய முடியாதது ஏன். முன் சந்ததிகளின் அறிவை நாம் பெற்றுக் கொள்ளவில்லை அவ்வளவு தான். பண்டைய அறிவு அவர்களோடு அழிந்து விட்டது. Sharing knowledge is the meaning of Human Existence என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் சொந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள ஒரு வாழ்நாள் போதாது. நான் என் வாழ்நாளில் என்ன கற்றுக் கொள்கிறேனோ அதை நான் விட்டுச் செல்ல வேண்டும்.
தொடரலாம். இறைவன் நாடினால்.