Nov 15, 2022

தாமதம் நீதியை கொன்று விடும்!

 கால வரையறை சட்டம் (Limitation Act) ஒவ்வொரு வழக்கு மற்றும் மனு தாக்கல் செய்வதற்கும், கால அளவை நிர்ணயித்து, அந்த காலம் எந்த நாளில் இருந்து கணக்கிடப்பட வேண்டும் என்பதையும் பட்டியல் இட்டுள்ளது.


அவ்வாறு உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாது போனால், அச்சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் தனியே, கால தாமதத்தை மன்னிக்க கேட்டு மனு செய்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த விதிவிலக்கான பிரிவு 5 ஆனது, வழக்குகள் தாக்கல் செய்யவோ அல்லது தீர்ப்புகளை செயல்படுத்த நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்வதற்கோ பொருந்தாது.

உதாரணமாக, ஒரு சொத்து மீட்பு வழக்கு தாக்கல் செய்ய, பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் இருந்து 12 ஆண்டுகள் கால வரையறை, அது போல ஒரு நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த நிறைவேற்றுதல்  மனு தாக்கல் செய்யவும் 12 ஆண்டுகள் கால வரையறை உள்ளது. இந்த கால நிர்ணயம் வழக்கின் தன்மையை பொறுத்து மாறும். 

பண வழக்குகள் தாக்கல் செய்ய, ஒப்பந்தம் அல்லது ஆவண தேதி அல்லது தவணை தேதி அல்லது இறுதியாக பணம் செலுத்தப்பட்ட அல்லது ஒப்புக் கொண்டு உயிர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் கால வரையறை. அதன் பின்னர் தாக்கல் செய்யும் வழக்குகள் ஏற்கதக்கது அல்ல.

நாம் பார்க்க போகும் இந்த வழக்கில் வாதிக்கு 3 ஆண்டுகள் கால வரையறை முடிந்து, அதன் பின் 375 நாட்கள் தாமதம் ஆகி விட்டது. வழக்கு தாக்கல் செய்யும் போது தனது தாமதத்தையும் மன்னிக்க கேட்டு வாதி பிரிவு 5 இன் கீழ் மனுவுடன் சேர்த்தே பிராதை தாக்கல் செய்கிறார்.


உச்சநீதிமன்றம் வரை போய், கால வரையறை முடிந்த பின்னர் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், இதே நிபந்தனை உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 21 இன் கீழ் வருகிற நிறைவேற்றுதல் நடவடிக்கை களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு, வாதியின் வழக்கு நிராகரிக்க பட்டது சரியென உத்தரவிட பட்டது.

கால வரையறை என்பது உரிமையியல் வழக்குகளின் அடிப்படை. காலம் கடந்த வழக்குகளை நீதிமன்றம் துவக்கத்திலேயே நிராகரித்து விட முடியும். Limitation Defeats Equity எனப்படும். வழக்கு கொண்டு வருபவரின் பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும் சரி, அவர் சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தை கடந்து வழக்கு தாக்கல் செய்தால் அது நிராகரிக்க பட வேண்டியது என்பதாகும். 

" Vigilantibus non dormientibus aequitas subvenit" - இந்த லத்தீன் பதத்தின் பொருள் "சட்டம் விழிப்புடன் இருப்பவருக்கு துணை நிற்கிறது. தூங்குபவருக்கு உதவுவது இல்லை" (Equity assists the vigilant and not those who sleep on their rights)

வழக்கு தாக்கல் செய்ய மட்டும் தான் கால வரையறை சட்டமா, வழக்கு முடிக்க எந்த கால வரையறையும் இல்லையா என்று கேட்டால், இருக்கிறது ஆனால் (செயலில்) இல்லை... 😐

இந்த பதிவினை காணொளி ஆக முகநூல் பக்கத்தில் காணலாம்.

தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி!

- த. செ. மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.
தொடர்பு கொள்ள @advmeerantj

Nov 13, 2022

Order 1 Rule 2 - Civil Procedure Code

கட்டளை 1  விதி  2

உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908


ORDER  1  :  PARTIES

RULE  2  :  POWER OF COURT TO ORDER SEPARATE TRIALS

 

" Where it appears  to the court that any joinder of parties may embarrass or delay the trial of suit, the court may put the plaintiffs to their election or order separate trails or make such other order as may be expedient. "


" தரப்பினர்களின் சேர்க்கை வழக்கு விசாரணையை சங்கடப்படுத்தும் அல்லது தாமதப்படுத்தும் என நீதிமன்றத்திற்கு தோன்றும் போது, நீதிமன்றம் வாதிகளையே தேர்வு செய்ய விட்டுவிடலாம், அல்லது தனிதனி வழக்கு விசாரணை நடத்த கட்டளையிடலாம், அல்லது சூழ்நிலைக்கு தக்கதென தோன்றும் வேறு உத்திரவினை பிறப்பிக்கலாம்."


முந்தைய கட்டளை 1 விதி 1  விதியில் யாரெல்லாம், எதன் அடிப்படையில் ஒன்று சேர்ந்து அல்லது தனித்து வாதிகளாக இருந்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதை பார்த்தோம். அதனை Dominus Litus என்கிறார்கள். வாதிக்கு என்ன வழக்கு, என்ன பரிகாரம், யார் மீது, யாருடன் சேர்ந்து என்பதை தீர்மானித்துக் கொள்ள இருக்கிற உரிமை அது. 

இந்த விதியில், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களா வாதிகளாக சேர்ந்து வழக்கு தாக்கல் செய்கையில், நீதிமன்றம் அதை அனுமதிப்பது அல்லது மாற்றி அமைப்பது, அல்லது நீதிமன்றம் நாடினால் மறுக்கவும் முடியும் என்பதை பற்றி பேசுகிறது.

உதாரணமாக, பல முதலீட்டாளர்கள் சேர்ந்து ஒரே நிறுவனத்திற்கு எதிராக வழக்கிடுகிரார்கள் என வைத்துக் கொள்வோம். இங்கே ஒவ்வொருவரின் தனித்த உரிமையும் நீதிமன்றம் தனித்தனியாக ஒரே வழக்கில் தீர்மானிக்க மிகவும் சிரமப்படும். அல்லது ஒவ்வொருவரும் தனித்தனியாக சாட்சிய விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டி இருக்கலாம். தனக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஏலம் எடுப்பவர்கள் சேர்ந்து ஒரே வழக்கிட முடியுமா? நீதிமன்றம் யாருக்கு முன்னுரிமை வழங்க முடியும்? இது குழப்பம் இல்லையா? அதனால் தான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் விதமாக இந்த விதி உள்ளது.

அதே நேரம், ஒரே வழக்கில் ஒரு நபரே தனக்காகவும் தன்னுடைய நிறுவனத்திற்காகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட வாதிகளாக இருக்க முடியும். ஒரு பூசாரி தனக்காகவும், கோயிலின் நிர்வாகி நிலைமையில் என இருவராக இருக்க முடியும். ஒரு நபர் தன் தனிப்பட்ட சொத்திற்க்காகவும் குடும்ப சொத்திற்க்காகவும் பாகதாரர் நிலைமையிலும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக வழக்கிட முடியும். ஒரு பெற்றோர் தனக்காகவும், தனது மைனர் குழந்தைகளுக்கு காப்பாளர் நிலைமையிலும் வாதிகளாக வழக்கிட முடியும். 

இது போன்ற பல வாதிகள் இருக்கும் வழக்கில், வழக்கு விசாரணையை சிக்கலின்றி நடத்தும் நோக்கிலும்,  நீதிமன்றம் அல்லது வாதிகளின்  உளத்தேர்விற்காகவும், இந்த விதி செயல்படும்.

இதுவரையில் வாசித்து இருந்தால், தங்களின் கற்றல் ஆர்வத்தினை பாராட்டுகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி!

எனது வீடியோ பதிவுகளை Law In Tamil - Legally Simplified சேனலில் பார்வையிடலாம்.


- த.செ.முசம்மில் மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.

என்னை தொடர்பு கொள்ள - @AdvMeeranTJ



Nov 3, 2022

Order 1 Rule 1 - Civil Procedure Code

கட்டளை  1  விதி  1

 உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908

 

ORDER  1   :  PARTIES 

RULE  1  :  WHO MAY BE JOINED AS PLAINTIFFS

" All persons may be joined in one suit as plaintiff where -

        (a)  any right to relief in respect of, or arising out of, the same act or transaction or series of acts or transactions is alleged to exist in such persons, whether jointly, severally or in the alternative; and

        (b)  if such persons brought separate suits, any common question of law or fact would arise.  "

 

ஒரே வழக்கில் பல நபர்கள் வாதிகளாக சேர்க்கப்படலாம் எப்போதெனில்,

        (அ)   ஒரு உரிமை அல்லது பரிகாரம், ஒரே செய்கை அல்லது பரிமாற்றம், அல்லது தொடர்ச்சியான செய்கைகள் அல்லது பரிமாற்றங்கள் பொருட்டு எழுந்து, நபர்களிடத்தில் இருப்பதாக கருதுமிடத்து, கூட்டாகவோ தனியாகவோ அல்லது வேறு வகையில், மற்றும்,

        (ஆ)  அத்தகைய நபர்கள் தனித்தனியாக வழக்குகளை கொண்டு வரும் போது, சட்டம் அல்லது சங்கதி பற்றிய பொதுவான கேள்வி எழும் போது,

  வாதிகளாக யாரெல்லாம் சேர்ந்து வழக்காடலாம் என்பதை பற்றி இந்த விதி பேசுகிறது. எதிர்த்து வழக்காடும் பிரதிவாதிகளைப் பற்றி அல்ல. வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது சரியா தவறா என கேள்வி எழுப்ப வேறு விதி உள்ளது. அதே போல வாதிகளாக சேர்த்து வழக்காட தகுதிநிலை உள்ளதா என்பதும் கேள்வியாக எழுப்பப் படலாம். இந்த விசயங்கள் யாவும் அடிப்படை யானவை என்பதால் வழக்கின் துவக்கத்திலேயே கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டும். தீர்ப்பிற்கு பின்னர் சரி தவறென்று வாதிட இயலாது. வழக்கின் ஆரம்பத்திலேயே தரப்பினர்கள் சேர்க்கப்படாமல்  விடப்பட்டதாக வாதிடப்படும் போது பின்னர் அவர்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப் படலாம். வழக்கில் சேர்க்கப்பட மேற்படி புதிய தரப்பினரின் விருப்பம் கேட்கப்படுதல் அவசியம் அல்ல.

    வாதிகளாக சேர்க்கப்படும் நபர்கள் இடையே பொதுவான ஒரு உரிமை இருக்க வேண்டும். அல்லது வழக்கு எழுவதற்கு அவர்களுக்குள் பொதுவான ஒரு காரணம் (வழக்கு மூலம்) இருக்க வேண்டும். வழக்கில் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம் (வழக்கெழு வினா) ஏதேனும் ஒன்று பொதுவாக இருந்தாலும் போதும். இது தான் தனித்து வழக்கு தாக்கல் செய்ய அல்லது வாதிகளாக வழக்கில் உடனிணைந்து கொள்ள ஒரு நபருக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.

    ஒரு வங்கியில் கடன் வாங்கிய அனைவரையும் ஒன்றாக சேர்த்து, அல்லது ஒரு வங்கியின் மீது நபர்கள் பலர் சேர்ந்து வழக்கிட முடியுமா என்றால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் வங்கியுடனான உறவு தனித்தனி ஒப்பந்தம் மூலம் எழுந்து உள்ளதால், அவர்கள் வாதிகளாக பிரதிவாதிகளாக ஒன்றிணைய முடியாது. வழக்கு எழுவதற்கான விஷயம் (வழக்குமூலம்) இங்கு ஒன்றாக இல்லை. ஆனால், அதுவே ஒரு ஊர் அல்லது ஒரு சமுதாயம் சார்பாக ஒரு நபர் மட்டும் பிரதிநிதி ஆக இருந்து வழக்காட முடியும். அதற்கு தனி விதி வகை செய்கிறது. இதில் ஊரில் உள்ள நபர்கள் அனைவருக்கும் ஒரே உரிமை, வழக்கு மூலம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

    இதற்கு முன்னர் இந்த விதியில், வாதிகள் அனைவருக்கும் ஒரே வழக்கு மூலம் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே வாதிகளாக இணைய முடியும் என்றிருந்து, பின்னர் 1976 முதல் வாதிகள் அனைவருக்கும் பொதுவான ஒரு உரிமை இருந்தாலே போதும் என்றானது. இதைத்தான் விதியின் இரண்டாவது நிபந்தனையில், பொதுவான ஒரு சட்டம் அல்லது சங்கதி பற்றி நீதிமன்றம் தீர்மானிக்க இருந்தால் போதும் என சொல்லப்பட்டுள்ளது.

    உதாரணத்திற்கு,

        ஒரு நபர் இரண்டு நிறுவனங்களின் பெயரை சேர்த்து அல்லது பகுதியாக பயன்படுத்தி தன்னுடைய பொருளை விற்க முயல்கிறார் என்றால், அந்த நபருக்கு எதிராக தடை கேட்டு இரண்டு நிறுவனங்களும் வாதிகளாக இனைந்து வழக்காட முடியும்.

    ஒரு நபரின் வீட்டை சுற்றி நாலாபுறமும் இருக்கும் நபர்களால் சிக்கல் வருகிறது என்றால், அவர் அந்த நான்கு பேர்களின் மீதும் சேர்த்து வழக்கிட முடியும். நான்கு வீடுகளின் பாதையை ஒரு நபர் அடைத்து வைத்திருந்தால், அந்த ஒருவர் மீது இவர்கள் நால்வரும் சேர்ந்து ஒரே வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

    வாரிசு வழியில் சொத்தை அடைந்த முதல் நபர் அதில் ஒரு பகுதியை இரண்டாம் நபருக்கு கொடுக்கிறார். ஆனால் அந்த சொத்துக்கு தான் வாரிசு என மூன்றாவது நபர் சொந்தம் கொண்டாடினால், முதலிரண்டு நபர்கள் சேர்ந்து மூன்றாமவர் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும். இரண்டாவது நபர் வாரிசுரிமை கீழ் வரவில்லை என்றாலும், சொத்தில் ஒரு பகுதி அளவு உரிமை ஏற்பட்டுள்ளது.

தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை ஒன்று, அல்லது ஒரே விதமான உரிமை என்பது தான் இங்கு அடிப்படை.

    வாதியோடு சமாதானமாக போய்விட்ட ஒரு பிரதிவாதி தன்னை வாதியாக மாற்றி சேர்த்துக் கொள்ள கேட்க முடியாது. அவர்  தன்னுடைய உரிமையை பொறுத்து மற்ற பிரதிவாதிகளுக்கு எதிராக அதே வழக்கில் அல்லது தனியே வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டியது தான்.

    இன்னும் அற்புதமாக, பழைய சட்டத்தில் "Right to any relief" என்று இருந்ததை புதிய சட்டத்தில் "Any Right to relief" என்று திருத்தம் செய்துள்ளார்கள். any என்கிற ஒரு வார்த்தை இடம் மாறுவதால் என்னவாகிடப் போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், பழைய சட்டத்தின் படி வாதியாக இருக்கிறவருக்கு (any relief) நீதிமன்றம் ஏதேனும் பரிகாரம் வழங்க வேண்டும், அல்லது வழக்கில் வாதியாக இருப்பவர் தனக்கு எதாவது பரிகாரம் நீதிமன்றத்திடம் கோரியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் வழக்காட தகுதி பெறவில்லை, அவர் வாதியாக இருக்க முடியாது. ஆனால் புதிய சட்டப்படி வழக்கில் சேர்க்கப்பட அவருக்கு (any right) ஏதாவது உரிமை இருந்தாலே போதும். அவர் வழக்கில் எந்த பரிகாரமும் கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இங்கு தான் அவசியத் தரப்பினர் என்கிற பதம் உண்டாகிறது. ஒரு நபருக்கு உரிமை இருந்தால் போதும், அவரைப் பொறுத்து வழக்கு மூலம் எதுவும் எழவில்லை என்றாலும், அவர் அவசியத் தரப்பினர் என்பதால் வழக்கில் வாதியாக இருக்கிறார். உதாரணமாக ஒரு குடும்பம் குடிவசிப்பதை சிலர் இடைஞ்சல் செய்கிறார்கள், அவர்களுக்கு எதிரான வழக்கில் அந்த வீட்டில் வசிக்காத வெளியூரில் வேலை பார்க்கும் நபரும் வாதியாக சேர்க்கப்படலாம். இடைஞ்சல் என்கிற வழக்குமூலம் அந்த நபரை பொறுத்து ஏற்படா விட்டாலும் கூட, அவருக்கு ஒரு உரிமை இருப்பதால் வாதியாக சேர்க்கப்படலாம் தவறில்லை.

    உரிமை என்பது தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்கலாம், என்று சொல்லப்பட்டிருக்கும் அதே வேளையில், இந்த விதியில் "or in alternative" என சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், ஊர் மக்களின் சார்பாக ஊர் தலைவர் பிரதிநித்துவ வழக்காடுவதும், ஒரு நிறுவனம் அல்லது வழிபாட்டுதலங்கள் போன்ற செயற்கை நபர்கள் சார்பாக பிரதிநிதிகள் வாதிகளாக இருக்கலாம் என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

    வாதிகளாக சேர்ந்து வழக்காட வராவிட்டால் அவர்களை பிரதிவாதிகளாக சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக கூட்டு குடும்ப சொத்து ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதாகிறது, பாக உரிமைதாரர்கள் அனைவரும் சேர்ந்து வழக்காட வரவில்லை என்றால் அவர்களை பிரதிவாதிகளாக சேர்த்து, அவர்களின் உரிமையும் அங்கிகரித்து அவர்களுக்கும் சேர்த்து பரிகாரம் தேடிக் கொள்ள முடியும். 

 

வழக்குத் தீர்வு :

Sh Jiwanand Jiwan and others -vs- The Himachal Pradesh Housing and Urban Developement Authority

" வாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனைக்கு, தனித்தனியாக பிரதிவாதியுடன் தனிப்பட்ட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்கள். வாதிகள் ஒவ்வொருவரின் வழக்கு மூலமும் வேறுவேறானது. வாதிகளின் வழக்கு ஒரே செயல், அல்லது தொடர்ச்சியான ஒரே செய்கையினால் நிகழவில்லை. எனவே  வாதிகள் கூட்டாக சேர்ந்து வழக்கிட தகுதியற்றவர்கள்"

 

அடுத்த விதி  :  Order  1  Rule  2

 

தங்களின் வருகைக்கு நன்றி!

 

எனது வீடியோ பதிவுகளை Law in Tamil - Legally simplified சேனலில் பார்க்கலாம்.

 

- த.செ.முசம்மில் மீரான், வழக்கறிஞர் , ஸ்ரீவைகுண்டம்.

    என்னை தொடர்பு கொள்ள @AdvMeeranTJ

Nov 2, 2022

Civil Procedure Code in Tamil

 

 உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908

Index: 

- கட்டளை 1 விதி 1

- கட்டளை  1  விதி  2

இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு நடைமுறை சட்டம். ஏனெனில் பல்வேறு சட்டங்களுக்கு அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று நடைமுறைகளோ விதிகளோ வகுக்கப்பட்டிருக்காது. அவ்வாறான சூழலில், அத்தகைய சட்டங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தும் நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்கள் பொதுவாக இந்த விசாரணை நடைமுறை சட்டத்தின் படியே செயல்படும். அதனால் இது பல்வேறு இடங்களில் செயல்படக் கூடிய ஒரு பொதுவான சட்டம். அத்துடன் சிறு சிறு திருத்தங்களை தவிர்த்து இந்தியா முழுக்கவும் ஒரே மாதிரியான நடைமுறைகளை கொண்டது.

இது மனித அறிவின் அற்புதமான படைப்பு. ஒரு உரிமையியல் வழக்கு எப்படி நடத்த வேண்டும் என்பதை படிப்படியாக அற்புதமாக விவரிக்கும் நடைமுறை நூல். ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும், ஒவ்வொரு பரிமாணத்தில் புதிய விசயங்களை எனக்கு தரத் தவறியதில்லை. 

இதற்கு தமிழில் புத்தகங்கள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை, என்னிடமும் இருக்கிறது. நான் எழுதப் போவது சட்ட மொழியாக்கம் மட்டும் அல்ல. அதில் இருந்து நான் கற்றுக் கொண்டதும், எனது அறிவு விளங்கிக் கொண்டதும், ஆங்கிலத்தில் விளக்க புத்தகங்களில் விரிவாக உள்ளதும், பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் என விரிவாக. அத்துடன் ஒரு உரிமையியல் வழக்கறிஞராக ஒவ்வொரு முறையும் வழக்குகளில் புதிதாக நான் கற்றறியும் விசயங்களையும் சேர்த்துக் கொள்வதற்காக. அதனால் இந்த தொடர் பதிவுகள் அவ்வப்போது Update செய்யப்பட்டுக் கொண்டே இருக்கலாம். புத்தகமாக எழுதி வெளியிடுவதை விட, வலைப்பக்கத்தில் எழுதுவதில் இந்த வசதி இருக்கிறது. எனது புத்தகம் எவ்வளவு விற்கும் என்பதில் நான் கவலைப்பட வேண்டி இருக்கும் ஏனெனில் லாப நஷ்டம் இருக்கிறது. ஆனால் எனது வலைப்பக்கத்தில் எவ்வளவு பேர் வாசிப்பார்கள் என்ற கவலை கூட எனக்கு இல்லை. Google இருக்கும் வரை இந்தப்பக்கம் உயிருடன் இருக்கும் என்று நம்புகிறேன்.

உரிமையியல் விசாரணை முறை சட்டம் ஒரு சிறிய சட்டம் அல்ல. தமிழாக்கம் வேண்டுமானால் சிறிய புத்தகமாக இருக்கலாம். இந்த தொகுப்பை எப்போது எழுதி முடிப்பேன் என்பதில் எந்த கால வரையறையும் உறுதியும் என்னால் கொடுக்க முடியவில்லை. ஆனால் எழுத வேண்டும் என்று எண்ணித் துணிந்து விட்டேன். இந்த முயற்சியை துவங்க எனக்கு உத்வேகம் அளித்தது எலன் மஸ்க்கின் வார்த்தைகள். பழைய நாகரிகங்களை பாருங்கள், ஆச்சரியப்படும் அளவு கட்டுமானங்களை பிரமீடுகளை செய்திருக்கிறார்கள். நம்முடைய தஞ்சை கோயிலை கூட எடுத்துக் கொள்வோம். நம்மால் இப்போது அவற்றை செய்ய முடியாதது ஏன். முன் சந்ததிகளின் அறிவை நாம் பெற்றுக் கொள்ளவில்லை அவ்வளவு தான். பண்டைய அறிவு அவர்களோடு அழிந்து விட்டது. Sharing knowledge is the meaning of Human Existence என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் சொந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள ஒரு வாழ்நாள் போதாது. நான் என் வாழ்நாளில் என்ன கற்றுக் கொள்கிறேனோ அதை நான் விட்டுச் செல்ல வேண்டும்.

தொடரலாம். இறைவன் நாடினால்.