Jul 25, 2022

நான் எப்போது சாவது?

ஒரு குட்டிக் கதை...

அரசன், எதிரிகளை வயப்படுத்தும் சில சித்துவித்தைகளை அறிந்துகொள்ள விரும்பினான். தன் தலைமை அமைச்சரிடம் யாரிடம் கற்றுக் கொள்வது எனக் கேட்டான்.


அமைச்சரும், "ஒரு அடர்ந்த அத்துவானக் காட்டில், தனித்த முனிவர் தவம் செய்து வருகிறார். அவருக்கு அந்த வித்தை அத்துப்படி என்கிறார்கள். அவரிடம் கற்றுக் கொள்ளலாம்" என்றார்.
ஆனால் அதில் இருந்தது ஒரு சிக்கல். "முனிவரை நாம் இருக்குமிடத்திற்கு வர வைக்க முடியாது நாம் தான் அவரிடத்திற்கு சென்றாக வேண்டும்" என்றார்.

அரசன், தனது குதிரைப் பரிவாரங்களுடன் ஆரவாரமாக கிளம்பி விட்டான். முனிவர், கண் திறக்க காத்திருந்து, பணிவாகத் தன் கோரிக்கையை முனிவர் முன் வைத்தான்.

முனிவர், "நான் செத்த பின்பு தான் உன்னால் என் வித்தைகளை கற்றுக் கொள்ள முடியும்" என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டார்.

மன்னன், குழப்பத்துடன் தன் கூடாரத்துக்கு திரும்பி விட்டான். இரவு உருண்டு பிரண்டாலும் உறக்கம் மட்டும் வரவேயில்லை. முனிவர் செத்த பின்னர் அவரிடம் இருந்து எப்படி கற்றுக் கொள்ள முடியும் என்பது விளங்காமல், அரசனுக்கு விடிந்தும் விட்டது. மறுபடியும் அதிகாலையில் அரசன் முனிவரை தேடிப் போனான். முனிவர் மனம் மாறி இருப்பார், சொல்லித் தருவார் என நம்பினான். ஆனால் இம்முறையும்,

முனிவர், "நான் செத்த பின்பு தான் உன்னால் வித்தைகளை கற்றுக் கொள்ள முடியும்" என்று சொல்லி விட்டு கண்ணை மூடிக் கொண்டார்.

அரசனுக்கு, கோபம் தலைக்கேறி நாடு திரும்பி விட்டான். அமைச்சரிடம், "முனிவர் பேசுவது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. அவர் செத்த பின்பு எப்படி நான் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்" என எரிச்சலடைந்தான்.

அமைச்சர், நிதானித்து யோசித்தார். அரசனை மேலும் கீழும் பார்த்தார். "மன்னா தாங்கள் அவரிடம் மாணவராக செல்லாமல், மன்னர் தோரணையில் சென்றதால், உங்களின் நான் என்கிற அகந்தை செத்த பின்பு தான் கற்றுக் கொள்ள முடியும் என்பதை தான் முனிவர் அப்படி கூறியிருக்கிறார்" என விளக்கினார்.

மன்னன் இந்த இரவும் உறங்கவில்லை. அவனது மனம் பல விஷயங்களை குறித்து யோசித்தது. நான் என்கிற அகம்பாவம் அழிந்த பின்னர் அவனுக்கு எவரையும் வசியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து  கொண்டான். மறுபடியும் முனிவரை தேடி செல்ல வேண்டிய தேவை அவனுக்கு ஏற்படவில்லை.

முற்றும்.