Jul 29, 2022

வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றிப் போனதால் காப்பீடு நிறுவனம் இழப்பீடு தராதா?

ஒவ்வொரு வாகனத்திற்கும் இத்தனை நபர்களை  தான்  ஏற்றிப்  போக வேண்டும் ,  இவ்வளவு  எடை  தான் ஏற்ற  வேண்டும்  என்று குறிப்பிடப்  பட்டு இருக்கும். ஆனால் எல்லா நேரமும் மக்கள்  அதை  பின்பற்றப்  போவதில்லை . பேருந்துகளை எடுத்துக்கங்க  இருக்கை  எண்ணிக்கைக்கு  தான் ஆட்களை  ஏற்றுகிரார்களா?

 இப்போ அதிக நபர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளாகினால் வாகனத்தின் சேதத்திற்கு  இழப்பீடு கிடைக்குமா?

 ஒரு வழக்கை  பார்க்கலாம்.

லக்ஷ்மி சந்த்  என்பவரு  ரிலையன்ஸ்  ஜெனரல்  இன்சூரன்ஸ்  நிறுவனத்துல  அவரோட  வாகனத்திற்கு  காப்பீடு  செய்து  இருந்திருக்கார்.

வாகனம்  விபத்திற்கு உள்ளாகுது.  வாகன  சேதத்தை  அவரே  செலவு  செய்து சரி செய்துடுறார். அப்புறமா செலவு  பண்ண  தொகைக்கு கிளைம்  கேட்கிறார். முதல்ல  நிறுவனம்  குறைத்து  மதிப்பீடு  செய்யுது.  அடுத்ததா  நிறுவனம்  ஒரு குழு விசாரணைக்கு  அனுப்பி,  அவரு  அதிகமா ஆட்களை  ஏற்றி  சென்றதை தெரிஞ்சுக்குது. அதனால், வண்டியோட அனுமதிக்கப்பட்ட  எண்ணிக்கைக்கு  அதிகமா ஆட்களை  ஏற்றியதால  எந்த  இழப்பீடும்  நிவாரணமும்  கிடையாது  என்று நிறுவனம் மறுத்து விடுது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரைக்கும் போயாச்சு. இப்போ உச்ச நீதிமன்றம் தீர்ப்புல சொன்ன விசயங்கள் தான் எது தவறு எது தவறு இல்லை என்பதை நமக்கு சுட்டிக் காட்டுது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புல சுட்டிக் காட்டக் கூடிய ஒரு வழக்கு,  " பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில்  அதிகமான  நபர்களை  ஏற்றி  சென்றதை  மட்டுமே வைத்து, வாகன உரிமையாளர், காப்பீட்டின் அடிப்படை விதிமுறை களை மீறி விட்டதாக நாம் கருத முடியாது. அதிக நபர்களை  ஏற்றிச் சென்ற காரணத்திற்காக மட்டும் காப்பீடு நிறுவனம் அதன் கடமையில் இருந்து தப்பி விட முடியாது - D.V.Nagaraju  -vs-  Oriental Insurance Company Limited .

லக்ஷ்மி சந்த் உடைய வாகனம் எதிரில் அஜாக்கிரைதையாக வேகமாக ஊட்டி வந்த வாகனத்தால் மோதப்பட்டு, சேதம் ஆனதாக FIR சொல்லுது. வாகனத்துல அதிக நபர்களை ஏற்றியதால தான் விபத்து நேர்ந்தது என காப்பீடு நிறுவனம் நிருபிக்கல. அதனால, லக்ஷ்மி சந்த் வாகனத்தில் ஆட்களே இல்லை என்பதோ அல்லது அதிகமான ஆட்கள் இருந்தார்கள் என்பதோ கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் இல்ல. அதை அடிப்படையா வச்சு இழப்பீடு மறுத்ததும் தவறு.

அதனால், உச்சநீதிமன்றம் லக்ஷ்மி சந்த்திற்கு முழு இழப்பீடு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டதோட தேவையில்லாம அவர உச்ச நீதிமன்றம் வரைக்கும் அலைய விட்டதற்கு இருபத்தைந்தாயிரம் வழக்கு செலவு தொகையும் கொடுக்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

Lakshmi Chand -vs- Reliance General Insurance Limited

ஆனால், ஒரு விஷயத்தை நாம கவனத்தில் வைத்துக் கொள்ளணும். அதிக நபர்களை ஏற்றி அதன் காரணமாக விபத்து நேர்ந்து இருந்தால் இந்த தீர்ப்பு முற்றிலும் மாறி இருந்திருக்கும். அப்படி தீர்ப்பு கிடைத்தால் அதையும் பகிரலாம்.

வருகைக்கு நன்றி!

 

அடுத்த பதிவில் சந்திக்கலாம்.


- த.செ.முசம்மில் மீரான்,

வழக்குரைஞர்,

திருவைகுண்டம்.

Jul 25, 2022

நான் எப்போது சாவது?

ஒரு குட்டிக் கதை...

அரசன், எதிரிகளை வயப்படுத்தும் சில சித்துவித்தைகளை அறிந்துகொள்ள விரும்பினான். தன் தலைமை அமைச்சரிடம் யாரிடம் கற்றுக் கொள்வது எனக் கேட்டான்.


அமைச்சரும், "ஒரு அடர்ந்த அத்துவானக் காட்டில், தனித்த முனிவர் தவம் செய்து வருகிறார். அவருக்கு அந்த வித்தை அத்துப்படி என்கிறார்கள். அவரிடம் கற்றுக் கொள்ளலாம்" என்றார்.
ஆனால் அதில் இருந்தது ஒரு சிக்கல். "முனிவரை நாம் இருக்குமிடத்திற்கு வர வைக்க முடியாது நாம் தான் அவரிடத்திற்கு சென்றாக வேண்டும்" என்றார்.

அரசன், தனது குதிரைப் பரிவாரங்களுடன் ஆரவாரமாக கிளம்பி விட்டான். முனிவர், கண் திறக்க காத்திருந்து, பணிவாகத் தன் கோரிக்கையை முனிவர் முன் வைத்தான்.

முனிவர், "நான் செத்த பின்பு தான் உன்னால் என் வித்தைகளை கற்றுக் கொள்ள முடியும்" என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டார்.

மன்னன், குழப்பத்துடன் தன் கூடாரத்துக்கு திரும்பி விட்டான். இரவு உருண்டு பிரண்டாலும் உறக்கம் மட்டும் வரவேயில்லை. முனிவர் செத்த பின்னர் அவரிடம் இருந்து எப்படி கற்றுக் கொள்ள முடியும் என்பது விளங்காமல், அரசனுக்கு விடிந்தும் விட்டது. மறுபடியும் அதிகாலையில் அரசன் முனிவரை தேடிப் போனான். முனிவர் மனம் மாறி இருப்பார், சொல்லித் தருவார் என நம்பினான். ஆனால் இம்முறையும்,

முனிவர், "நான் செத்த பின்பு தான் உன்னால் வித்தைகளை கற்றுக் கொள்ள முடியும்" என்று சொல்லி விட்டு கண்ணை மூடிக் கொண்டார்.

அரசனுக்கு, கோபம் தலைக்கேறி நாடு திரும்பி விட்டான். அமைச்சரிடம், "முனிவர் பேசுவது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. அவர் செத்த பின்பு எப்படி நான் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்" என எரிச்சலடைந்தான்.

அமைச்சர், நிதானித்து யோசித்தார். அரசனை மேலும் கீழும் பார்த்தார். "மன்னா தாங்கள் அவரிடம் மாணவராக செல்லாமல், மன்னர் தோரணையில் சென்றதால், உங்களின் நான் என்கிற அகந்தை செத்த பின்பு தான் கற்றுக் கொள்ள முடியும் என்பதை தான் முனிவர் அப்படி கூறியிருக்கிறார்" என விளக்கினார்.

மன்னன் இந்த இரவும் உறங்கவில்லை. அவனது மனம் பல விஷயங்களை குறித்து யோசித்தது. நான் என்கிற அகம்பாவம் அழிந்த பின்னர் அவனுக்கு எவரையும் வசியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து  கொண்டான். மறுபடியும் முனிவரை தேடி செல்ல வேண்டிய தேவை அவனுக்கு ஏற்படவில்லை.

முற்றும்.