A Nation Borns STOIC; Dies EPICURIEN
என்கிற சொல்லாடலை வாசிக்க கிடைத்தது. இதன் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.
Stoic தத்துவம் எதை நம்மால் கட்டுப்படுத்த முடியுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்கிறது. எதிர்காலத்திற்காக இன்று உழைக்க வேண்டும். உதாரணமாக ஒரு மரத்திற்கு விதை நடுவது போல. கடந்து சென்ற காலங்கள் அனைத்தும் இறந்து போனவை. நாளை என்பது ஒரு நாள் இன்று என்றாகி விடும், அதாவது எதிர்காலம் ஒருநாள் நிகழ்காலமாக ஆகும். இன்னும் விளக்கமாக இன்றைய நாள் என்றோ ஒருநாள் எதிர்காலமாக இருந்திருக்கும். ஆக எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும் அதற்கு நிகழ்காலத்தில் தியாகங்கள் செய்யலாம். இவர்களை பொறுத்த வரை, ஒருமுறை தான் பிறக்கிறோம், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
Epicurien வகையினர், நாளை என்பது நிச்சயமில்லை, இன்றே வாழ்வோம் என்பவர்கள். வாழ்வது ஒருமுறை தான் அதை விரும்பியபடி வாழ வேண்டும் என்கிற கொள்கையினர்.
ஒரு தேசம் கட்டமையும் போது, அதனை உருவாக்க, அதன் சுதந்திரத்திற்கு முன்னோர்கள் இரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து பல தியாகங்களை செய்து இருப்பார்கள். அதனால் ஒரு தேசம் பிறக்கும் போது Stoic ஆக பிறக்கிறது. சில தலைமுறைகள் கடந்த பின்னர் முன்னோர்களின் தியாகங்களின் வலியும் வடுக்களும் மறந்தும் மறைந்தும் போய் விடுகிறது. மக்கள் அவரவர் நலனுக்காக Epucurien வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார்கள். தேசம் அழியத் துவங்குகிறது. இலங்கை என்னும் வாழ்ந்து கெட்ட தேசத்தை கண்முன்னே காண்கிறோம். இரு சகோதரர்களின் நலனுக்காக ஒரு தேசம் பலியாகிறது.
இதுவே தான் பெரிய குடும்பங்களிலும் நடக்கிறது. பூஜ்ஜியத்தில் இருந்து உருவான குடும்பங்கள் மூன்று தலைமுறைகளின் மறுபடியும் பூஜ்ஜியத்தை அடைந்து விடுகின்றனவாம்.
( குடும்பங்களுக்கும் Stoic தத்துவம் அவசியம் என நான் நினைக்கிறேன். ஆனால், எச்சரிக்கை இந்த தத்துவங்கள் உங்களின் மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக இருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலோ, ஒரு மூச்சு பயிற்சி போன்றோ எடுத்துக் கொண்டால் உண்மையில் மனதை தெளிவுபடுத்த கூடிய அருமையான விஷயம் தான். )
எர்னஸ்ட் ஹெமிங்க்வே சொல்வது போல, அழிவு என்பது அணுகுண்டு போட்டு ஒரே நாளிலோ, அல்லது கொரோன போல புதுவித கொள்ளை நோய் மூலமோ தான் வர வேண்டும் என்பதில்லை. உதாரணமாக ரோம் நகரம் அழிந்து போனது. அதற்கு நூறு ஆண்டுகள் ஆனது. மக்கள் தங்கள் தேசம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை உணராமலே அது நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சிரமத்தை நோக்கி சென்றார்கள்.
முதலில் பொருளாதாரம் தான் பலியாகும். வேலைவாய்ப்பு குறையும். பொருட்களின் விலை ஏறும். மக்கள் ஏழைகள் ஆவார்கள். குடும்பத்திற்கு உணவளிப்பதே பெரும்பாடாகி விடும். கடன் உயரும். முதலீடுகள் ஓடிவிடும். அறிவுத் திறமை குறையும் அல்லது திறனுள்ளவர்களும் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். அரசாங்கத்திற்கு இவை அனைத்தும் தங்கள் தவறில்லை என்றும், அல்லது மூடி மறைப்பது திசை திருப்புவது மட்டுமே வேலையாக இருக்கும். அரசாங்கம் மக்களை நம்ப வைக்கும் வேலைகளை செய்யும், விழிப்புணர்வு வராமல் பார்த்துக்கொள்ளும். அதை கல்வியாகவே கற்பிக்கும், ஊடகங்கள் வழியாக திரும்ப திரும்ப பரப்பும். அதிகாரத்தில் ஆட்சியில் இருப்பது மட்டுமே முக்கியமாகி கடுமையான சட்டங்கள் இயற்றப்படும். சமூகத்தில் மனிதர்களின் அத்தனை நல்ல குணங்களும் காணாமல் போய் விடும். தனது குடும்பத்திற்கு உணவளிக்க குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கும். அத்துடன் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் குழுக்களில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். இந்த குழுக்கள் அரசாங்க ஆசி பெற்றதாகவும், பறித்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். மக்கள் நிகழும் மாற்றங்கள் எதையும் விளங்கிக் கொள்ளாமலே வாழ்வார்கள்.
இந்த ஆருடங்கள் எல்லாம் பயமுறுத்துகிறது. இலங்கை மக்கள் தங்கள் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள இயலாத அளவிற்கு, மொழி இனம் மத ரீதியான தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு உட்படுத்தப் பட்டு இருக்கிறார்கள்.