வருகைக்கு நன்றி!
தாத்தா சொத்து பேரனுக்கு சொந்தம். கொள்ளி வச்ச பேரனுக்கு தான் சொத்து போகும் என்பதெல்லாம் கிராமங்களில் மக்களிடம் இருக்கும் நம்பிக்கை தானே தவிர சட்டத்தில் அப்படி எதுவும் இல்லை.
கிறிஸ்தவ , இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்களின் படி தகப்பனார் உயிரோடு இருக்கும் போது தாத்தாவின் சொத்து பேரப் பிள்ளைகளுக்கு இறங்காது. அதனால் அதை விட்டு விடலாம். ஆனால் இந்து வாரிசுரிமை சட்டத்தில் பூர்வீக சொத்து என்ற ஒன்று இருப்பதால், பேரப்பிள்ளைகளுக்கு பிறக்கும்போதே பூர்வீக சொத்தில்உரிமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கில், சொத்து தாத்தாவின் பெயரில் உள்ளது. தகப்பனார் அதை விற்று விடுகிறார். பேரன் அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து, விற்றது செல்லாது என்று விளம்புகை செய்யவும், பாகப்பிரிவினையும் கோருகிறார். விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆகி விடுகிறது. முதல் மேல்முறையீட்டில் அனுமதிக்கப்படுகிறது. அதனால் இரண்டாம் மேல்முறையீட்டிற்கு மாண்பமை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.
உயர்நீதிமன்றம் பின்வரும் விசயங்களை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து விடுகிறது.
முதலில், சொத்து தாத்தாவின் பெயரில் உள்ளது. அவர் எந்த உயிலும் எழுதி வைக்கவில்லை. சொத்து பூர்வீக சொத்து என்பதற்கு, அதாவது 4 தலைமுறை தாண்டி வந்த பாகம் பிரியாத சொத்து என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சொத்து தாத்தாவின் பெயரில் இருந்தால், அது அவரின் சொந்த சம்பாத்திய சொத்து ஆகவே கருத வேண்டும். மேலும் தாத்தா 1956 ஆம் ஆண்டிற்கு பின், அதாவது இந்து வாரிசுரிமை சட்ட திருத்தத்தின் பின் இறந்துள்ளார். அதனால் இந்து வாரிசுமை சட்டம் பிரிவு 8 இன் படி முதல்நிலை வாரிசான மகன் என்ற அடிப்படையில், சொத்து தந்தைக்கே போய் சேரும். தந்தையின் கையில் இருக்கும் சொத்து பூர்வீக சொத்து என்ற தரத்தில் இருக்காது. அதனால் தந்தை அதனை தனது சொந்த சொத்து போல உரிமை மாற்றம் செய்வதற்கு முழு உரிமை கொண்டவர். தந்தை ஏற்படுத்திய கிரைய ஆவணங்கள் செல்லும்.
மேலும் பேரனுக்கு சட்டப்படி சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்பதால், இந்த வழக்கு தாக்கல் செய்ய அவருக்கு தகுதிநிலை (locus standi) இல்லை. அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, விசாரணை நீதிமன்றத்தின் தள்ளுபடி உத்திரவு உறுதிசெய்யப்பட்டது.
படிக்க : IndianKanoon
சுருக்க வீடியோவாக தமிழில் மற்றும் ஆங்கிலத்தில்.
-வழக்குரைஞர். த.செ.முசம்மில் மீரான்,
திருவைகுண்டம்.