Jun 5, 2021

பத்திர பதிவிற்கு அசல் ஆவணம் அவசியமா?

பத்திரம் பதிவு செய்ய..

சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிமையாளரின் அசல் ஆவணம், பட்டா, தீர்வை முதலியன கேட்பார்கள்.

அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், அது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்து கிடைக்கப் பெறவில்லை என்று சான்று பெற்று, நாளிதழில் விளம்பரம் கொடுத்து, அதன் பின் நகல் ஆவணத்தை கொண்டு பத்திரம் பதிய வேண்டி இருக்கும். 

ஆனால், இந்த விதிகள் பதிவு சட்டத்திலோ அல்லது பதிவு விதிகளிலோ கிடையாது. இது பதிவுத் துறை சுற்றறிக்கை மூலம் உருவாக்கப்பட்ட வழிகாட்டு விதிமுறைகள் ஆகும்.

இந்த விதிமுறைகள் சட்டப்படியானவை அல்ல என்றும், பத்திரம் பதிய வருபவர்கள் சரியான நபர்களா என்பதை கவனித்தால் போதும் என்றும், பதிவு செய்வதற்கு அசல் ஆவணம் கட்டாயம் இல்லை என்றும், அதன் காரணமாக பதிவு செய்ய மறுக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தீர்ப்பை சார் பதிவாளர்கள் புரிந்து கொண்டால், பொது மக்களுக்கு அலைச்சல் தவிர்க்கப்படும்.

தீர்ப்பின் இணைப்பு ஆங்கிலத்தில் வாசித்துக் கொள்ளலாம்.

தமிழில் காணொளி யாக வெளியிட்டுள்ளேன்.


நன்றி!

- த. செ. முசம்மில்மீரான்,
  வழக்குரைஞர்
  திருவைகுண்டம்.

பின்குறிப்பு:

இந்த வழக்கின் தீர்ப்பை பின்பற்றி 11-02-2021 ஆக அண்மையில் உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கின் Sivanadiyan -vs- The SubRegistrar தீர்ப்பில் மறுபடியும் அசல் ஆவணம் இல்லை என்று பத்திர பதிவை மறுக்க கூடாது என உறுதி படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை பகிர்ந்த நண்பர் வழக்கறிஞர் விஜயன் அவர்களுக்கு நன்றி. அவரது குரல் பதிவை கீழே கேட்கலாம்.


Jun 4, 2021

நிற்கும் போது மயங்கி விழாமல் நம்மை பாதுகாப்பது எது?

நாம் படுத்திருக்கும் போது நமது உடல் சமநிலையில் உள்ளது. ரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. ரத்த அழுத்தமும் ஒரே நிலையில் இருக்கிறது.

இதிலிருந்து நாம் எழுந்து நிற்கும் போது ஏற்படக்கூடிய ரத்த அழுத்த மாறுபாட்டால் உயர்வால், நாம் மயங்கி விழ வேண்டும்.ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. 

இதற்கு காரணம் இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லக் கூடிய இரத்த நாளங்களோடு இணைந்து உள்ள Barereceptors என்கிற நரம்புகள். இவை மத்திய நரம்பு மண்டலத்தையும், மூளை இரத்த ஓட்டத்தையும் இணைக்கின்றன. மூளை இரத்த ஓட்டத்தில் ஏற்படக் கூடிய மாறுதல்கள் மீது உடனடியாக செயல்படுகின்றன. இதை BaroReflex என்று சொல்கிறார்கள். 

குறைவான இரத்த அழுத்தத்தின் போது மயக்கம் தோன்றும் சமயம், அல்லது அதிக இரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு,பக்கவாதம்,இதய செயலிழப்பு முதலியவை உடனடியாக ஏற்பட்டு விடாமல், தாங்கும் சக்தியாக இந்த நரம்புகள் செயல்படுகின்றன.

சரி, இது உடற்கூறு. இதில் நாம் அறிந்து கொள்ள என்ன இருக்கிறது?

இந்த நரம்புகள் செயல்பட தூண்டுகின்றன புரதங்கள் PIEZO1, PIEZO2 ஆகியவை கண்டறியப் பட்டுள்ளது. இந்த புரதங்களின் கட்டமைப்பு அறியப்பட்டு, இவை உருவாகத் தூண்டக் கூடிய மூலக்கூறு கண்டறியப் பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு எவ்வாறு உதவும்?

தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு உள்ள மருந்துகளில் முன்னேற்றம் ஏற்படும். தலைசுற்றல் பிரச்சினை உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.

இதில் இரத்த அழுத்தம் தொடர்புடைய  உடலியக்க மற்றும் தொற்றா நோய்கள் கிருமிகள்  உண்டாக்குவது இல்லை. கிருமித் தொற்றுகளை உடலின் நோயெதிர்ப்பு பார்த்துக் கொள்கிறது. ஆனால் அதே நோயெதிர்ப்பு சக்தி உடலின் இயக்க  சீர்கேடுகளை தாக்குவதாலேயே Auto Immune Disease கள் ஏற்படுகின்றன. இது போல உடலியக்க தூண்டுதல்கள் தொடர்புடைய மூலக்கூறுகள் கண்டறியப் படுவது, தொற்றா நோய்களையும் தீர்க்கும் வழிகளை தரும்.

- த.செ. முசம்மில் மீரான் BE.,BL.,
  வழக்குரைஞர்,
  திருவைகுண்டம்.