Sep 15, 2020

ஒரு வழக்கின் தீர்வு மற்றொரு வழக்கை தீர்மானிக்குமா?

வழக்கறிஞராக நாம் CaseLaw , Precedent , Citation, Authority என்று உயர்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தின் முன்தீர்ப்புகளை வழக்கில் பயன்படுத்துவது வழக்கம் தான். 

இவை சட்டங்களுக்கு நீதிமன்றங்கள் தரும் விளக்கமாக அல்லது நீதிமன்றம் வரைந்த சட்டமாக கருதப்படும். அதே மாதிரியான பிரச்சினை அல்லது அதே சட்டத்தின் படி தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளாக இவை இருக்கும். முன்‌தீர்ப்புகள் எந்த அளவுக்கு ஒரே மாதிரியான மற்ற வழக்குகளை தீர்மானிக்க முடியும் என்பதை கீழ்வரும் வழக்கு தீர விவாதித்துள்ளது.

Padma Sundara Rao (dead) and Ors -vs- State of Tamilnadu and Ors.
   - 2002 (3) SCC 533.

ஒவ்வொரு வழக்கும் தனிப்பட்ட சங்கதிகளைக் கொண்டது‌. ஒரு வழக்கில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பானது அந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும் பொருந்தக் கூடியது, அந்த குறிப்பிட்ட வழக்கின் தனிப்பட்ட சங்கதிகளைப் பொருத்தது. வழக்கு சங்கதியை அறிந்தால் மட்டுமே அதில் ஒரு நீதிமன்றத்தின் தீர்மானத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

அதனால் கீழமை நீதிமன்றங்கள் முன்தீர்ப்புகளை எடுத்தாள்கையில், முந்தைய வழக்கின் சங்கதிகள் இந்த வழக்கோடு எவ்வாறு ஒத்துப்போகிறது, எதனால் முன்தீர்ப்பினை சார்ந்து இந்த தீர்ப்பு பகரப்படுகிறது‌ என்பதை தன் தீர்ப்பில் விவரிக்க வேண்டும். ஏனெனில் ஒன்றுபோலத் தோன்றும் இரு வழக்குகளின் சங்கதிகளின் சிறு வேறுபாடும் முற்றிலும் மாறுபட்ட தீர்மானத்தை எடுக்கச் செய்யலாம்.