Apr 3, 2019

அமைதிகாக்கும் உரிமை

ஒரு குற்ற வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அமைதியாகவே இருந்தால், சந்தேகத்திற்கிடமானதாக எடுத்துக் கொள்ளலாமா?

முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என அனுமானிக்க பட வேண்டும் என்பதை பார்த்தோம். மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு குற்ற விசாரணையின் போது அமைதியாக இருக்கும் உரிமையும் உள்ளது. அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணையின் போது அமைதியாக இருப்பதினால் அந்த குற்ற வழக்கு அவருக்கு எதிராக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது இல்லை.

நமது அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 20 (3) ‌ இல் எந்த ஒரு நபரும் தனக்கு எதிராகத் தானே சாட்சி சொல்ல கட்டாயப்படுத்த படக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

பன்னாட்டு உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பட்டயத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. . இதில் குற்றவியலின் அடிப்படை உரிமைகளான, சட்டப்படியாக மட்டுமே கைது செய்ய வேண்டும் என்பது உறுப்பு 9.1 லும் எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்கிற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது 9.2 லும் முறையான விசாரணைக்கான உரிமை 11.3 லும் தனக்கு எதிராகத் தானே சாட்சி சொல்ல கட்டாயப்படுத்த கூடாது என்கிற உரிமை 14.3 லும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் கூட சூழ்நிலை சாட்சியம் நேரடி சாட்சியம் ஆகிய முதல்நிலை வழக்கிற்கான நிருபணங்கள்  இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவரின் அமைதி அவருக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்.

அரசுத் தரப்பே குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பது குற்றவியலின் அடிப்படையாக இருந்த போதிலும் சில சமயங்களில் இவ்வாறான நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் திரும்பிவிடுகிறது.

ஒப்பந்த மீறல்கள், மாற்றுமுறை ஆவணச் சட்டம், ஊழல் ஒழிப்புச் சட்டம்,  சுங்கவரி சட்டம் ஆகியவற்றின் கீழான புகார்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

 அரசியலமைப்பு வழங்கியுள்ள இந்த அமைதி காக்கும் உரிமை உரிமையியல் வழக்குகளில்  செல்லுபடியாகாது.