ஒரு உரிமையியல் வழக்கினை தாக்கல் செய்யும் போது அதன் பிராது விவரத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பது உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 7 ல் தெளிவு படுத்தப் பட்டுள்ளது. அதன்படி
- நீதிமன்றத்தின் விவரம், நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகார வரம்பு உள்ளதா என்கிற விவரம்.
- தரப்பினர்கள் பெயர் விவரம் முகவரி, அவர்களில் இளவர், இயலாதவர் உள்ளனரா, அவர்கள் காப்பாளர் அல்லது முகவர் மூலம் முன்னிலை ஆகிறார்களா? என்கிற விவரம்.
- வழக்கிற்கான காரண காரியங்கள், சம்பவங்கள், வழக்குமூலங்கள் ஏற்பட்ட காலம் மற்றும் விவரம்.
- வாதி கோருகிற பரிகாரங்கள், அதற்கான நீதிமன்ற முத்திரைக் கட்டண விவரம்.
- சொத்து வழக்காக இருந்தால் சொத்தின் முழு விவரம் மற்றும் மதிப்பு, பண வழக்காக இருந்தால் அதன் மதிப்பு, கொடுக்கல் வாங்கல் விவரம்.
- எதிர் தரப்பிற்கு உள்ள உரிமைகள் கடப்பாடுகள் விவரம்.
- உரிய காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்கிற விவரம்.
- வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் விவரப் பட்டியல். ஆவணங்கள் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை ஆவணங்கள் தன வசம் இல்லை என்றால், யாரிடம் உள்ளது என்கிற விவரம். அசல் ஆவணம் இல்லை என்றால் நகல் தாக்கல் செய்யலாம்.
ஒரு நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ளும் முன் மேலே கண்ட விசயங்களை பார்த்துக் கொண்டால் போதும்.
அதே போல ஒரு நீதிமன்றம் எப்போதெல்லாம் வழக்கை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம் என்பதும், அல்லது வழக்கிற்கு எண் கொடுத்த பின்பு கூட நிராகரிக்கலாம் என்பதும் இதே கட்டளையில் சொல்லப் பட்டும் உள்ளது.
- வழக்கிற்கான காரண காரியம், வழக்கு மூலம் தெளிவாக இல்லாத போது,
- வழக்கினை குறைவாக மதிப்பிட்டு, குறைவான நீதிமன்ற கட்டணம் செலுத்தி இருந்து, அதை சரி செய்ய மறுக்கிற போது,
- வேறு சட்டங்களில் இத்தகைய வழக்கை சிவில் நீதிமன்றம் விசாரிக்க கூடாது என தடை செய்யப்பட்டிருக்கும் போது,
- வழக்குரைக்கு இரண்டு நகல்கள் தாக்கல் செய்யாத போது, ஒரு அசல் பிராது, ஒரு நகல் பிராது இருக்க வேண்டும்.
- வழக்குரைக்கு எண் தரப்பட்ட பின்னரும் ஏழு நாட்களுக்குள் எதிர் தரப்பிற்கு சம்மன் படி செலவுகள் செலுத்தாத போது,
என இவ்வளவு தான் காரணம் சொல்லப் பட்டுள்ளது. அவ்வாறு நீதிமன்றம் வழக்குரை முழுவதுமாக நிராகரித்தால் அதற்கு தெளிவான காரணத்தை சொல்ல வேண்டும். ஆக நீதிமன்றம் பார்க்க வேண்டிய முக்கியமான மூன்று விசயங்கள், (Jurisdiction) இந்த நீதிமன்றத்திற்கு வழக்கினை விசாரிக்க எல்கை , பணமதிப்பு மற்றும் சட்ட வரம்பு இருக்கிறதா? (Limitation) வழக்கு சரியான காலக் கெடுவிற்குள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா? (Court Fee) வழக்கின் பரிகாரம் சொத்து மதிப்பு சரியாக கணக்கிடப்பட்டு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் செலுத்தப் பட்டு உள்ளதா? இவ்வளவு தான்.
ஆனால், பெரும்பாலான நீதிமன்றங்கள் இதனை மட்டும் பார்ப்பதில்லை. அல்லது இதனோடு நிறுத்திக் கொள்வது இல்லை.
ஒருவேளை வழக்கில் திருத்தங்கள் இருந்தால், நீதிமன்றம் வழக்கு கட்டை திரும்ப தரும், சரி செய்து தாக்கல் செய்யலாம். அல்லது வேறு நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யலாம். வழக்கை திரும்ப தருவதோ, நிராகரிப்பதோ, புதியதாக வழக்கை மறுபடியும் தயார் செய்து தாக்கல் செய்வதற்கு ஒரு தடையாக அமையாது.
நீதிமன்றங்கள் அசல் ஆவணங்கள் வழக்குரை உடன் தாக்கல் செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. அவ்வாறு எந்த கட்டாயமும் இல்லை. அசல் ஆவணம் ஏன் இல்லை என்பதற்கு காரணம் சொல்வது, அல்லது அசலை ஒப்புமை படுத்தி பார்த்துக் கொள்ள காட்டினால் கூட போதுமானது.
உரிமையியல் விசாரணை முறை சட்டம், மனித அறிவின் அற்புதமான உருவாக்கம். ஒரு முழுமையான விதிமுறை தொகுப்பு. அதில் எங்கேயும் வழக்கை எண் தருவதற்கு என்று தனிப்பட்ட விதிமுறைகளை வகுக்கவில்லை. வழக்கில் இருக்க வேண்டியது இருந்தால் போதும் என்பது தான் சொல்லப்பட்டுள்ளது. அதன் பிரிவு 9 சிவில் நீதிமன்றங்களுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குகிறது. மற்ற எந்த சட்டத்திலும் சிவில் நீதிமன்றம் இத்தகைய வழக்கை விசாரிக்க கூடாது என தடை செய்து இருந்தால் தவிர என்ன விதமான வழக்கையும் நாம் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்.
அதனால், இனி வழக்கினை தாக்கல் செய்யும் முன் மேலே கண்ட அடிப்படையான விசயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி!
- த.செ.முசம்மில் மீரான். வழக்கறிஞர், திருவைகுண்டம்.